போராட்ட அமைப்பை அமைதியான போராட்டக்காரர்கள் என கருத முடியாது அவர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையின் போதே மகிந்த ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதத்தலைவர்களால் கூட மே 9 ம் திகதி வன்முறையை தடுக்க முடியவில்லை.
கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள போராட்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம்
சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மே 09 அன்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது கொலை செய்யப்பட்டார். முதலில் தற்கொலை என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் கொலை என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
அமைதியின்மை ஏற்பட்ட போது அமரகீர்த்தி அத்துகோரல நிட்டம்புவவில் தனது வாகனத்திற்கு இடையூறு விளைவித்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மக்கள் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியை விட்டு வெளியேறிய அவர், பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் கட்டிடத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் பிறகு, அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் இறந்து இருந்தார்.
பின்னர் காவல்துறையினரின் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IBC Tamil