இலங்கையில் தொடரும் நெருக்கடி – உயிரை பணயம் வைத்து ரயிலில் பயணிக்கும் மக்கள்

நீண்ட வார விடுமுறைக்கு பின் நேற்று (15ம் திகதி) அலுவலக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில், ​​போதிய பேருந்துகள் இல்லாததால், ரயில்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

பிரதான மார்க்கம் மற்றும் கடலோரப் பாதையில் உள்ள ரயில்களில் நெரிசல் அதிகமாக இருந்ததால், பயணிகள் பாதையோரத்திலும் மேற்கூரையிலும் பயணம் செய்வதைக் காண முடிந்தது.

பிரதான வீதி, கரையோர வீதி, களனி வீதி மற்றும் புத்தளம் வீதியில் பல ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டமையே இதற்குக் காரணம். ரயில்வே தொழிற்சங்கக் கூட்டணியின் இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்தார்.

ரயில்களின் சரியான பராமரிப்பு இல்லை

புகையிரதம் நல்ல நிலையில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்த போதிலும், அதனை உரிய முறையில் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும் போது ரயில் கட்டணம் குறைவாக உள்ளதனால் பயணிகள் ரயிலின்பால் ஈர்க்கப்படுவதாகவும், போக்குவரத்து அமைச்சினால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் ரயில்களின் சரியான பராமரிப்பு இல்லாததால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும், மேலும் ரயில்கள் விரைவில் இயக்கப்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Tamilwin