“ஏழை நாடுகளுக்கான COVID-19 தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்” – COVAX

ஏழை நாடுகளுக்கான COVID-19 தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் தலைவர்கள், அதனை மெதுவடையச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விநியோகப் பிரச்சினையால், தடுப்பு மருந்துகள் வீணாவதைத் தவிர்ப்பது அதன் நோக்கம்.

தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்துக் கொள்ளும்படியும் அவற்றை முன்பு திட்டமிட்டதைவிட மெதுவாக நிறைவேற்றும்படியும் உலகச் சுகாதார நிறுவனம் வழிநடத்தும் COVAX திட்டத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் 400 முதல் 600 மில்லியன்வரை, குறைவான தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கிருமிப்பரவல் சூழலின் தொடக்கத்தில், வசதிபடைத்த நாடுகள் தடுப்புமருந்துகளை அதிவேகத்தில் பெற்றுக்கொண்டதால் அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அவசரம் கருதி மருந்தாக்க நிறுவனங்களும் விரைந்து தடுப்புமருந்துகளை அதிக அளவில் உற்பத்தி செய்தன.

கோவிட்-19 நோய்க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னமும் சில நாடுகளில் எதிர்ப்பும் தயக்கமும் நிலவுகிறது.

இவை அனைத்தும், தடுப்புமருந்துக்கான உடனடித் தேவையைக் குறைத்துவிட்டன.

தேவையில்லாமல் தடுப்புமருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதை, மருந்தாக்க நிறுவனங்கள் தவிர்க்கும்படி COVAX கேட்டுக்கொண்டது.

வளங்கள் தேவையின்றி வீணடிக்கப்படுவதைத்  தவிர்க்க, விநியோகத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு, COVAX திட்டத்தை உலகச் சுகாதார நிறுவனத்துடன் இணைந்து வழிநடத்தும் தடுப்பூசிக் கூட்டணியான GAVI பரிந்துரைத்தது.

 

 

Seithimediacorp