பிரதமருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்! பழனி திகாம்பரம் கோரிக்கை

இலங்கையின் நெருக்கடி நிலைமையை தணிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் நெருக்கடியான நிலைமையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நாட்டை மீட்டெடுக்க எவரும் முன்வரவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தனி ஆளாக முன்வந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.

பிரதமருக்கு இரண்டு மாத கால அவகாசம்

அதே நேரம் தற்போதைய பிரச்சினைகள் ஒரேடியாக துரித கதியில் தீர்வு காணப்படக் கூடியவை அல்ல. எனவே குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களேனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

தற்போதிருக்கும் நிலையில் நாட்டை சஜித் பொறுப்பேற்றாலும், அனுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றாலும் அவர்களாலும் எந்தவொரு பிரச்சினைக்கும் துரித கதியில் தீர்வு காண முடியாது. அதற்கு இரண்டொரு மாத காலங்கள் அவகாசம் எடுக்கும்.

எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை குறைகூறுவதை விடுத்து பிரச்சினைகளை சரியான வழியில் தீர்ப்பதற்கு அவருக்கு இன்னும் இரண்டொரு மாதங்கள் அவகாசம் வழங்குவது சிறப்பானதாக இருக்கும் என்றும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

Tamilwin