மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்!

பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டின் சாபமாவார், அவர் பதவி விலகினால் மாத்திரமே நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள சாபம் நீங்கும் எனவும் குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கம் வேண்டும்

தற்போது கிணற்றுக்குள் வசிப்பது எவ்வாறு என்பதை அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் தேவை அதுவல்ல.

கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கு கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும், அவ்வாறில்லை எனில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் மக்கள்

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் , எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை.

மக்கள் பொறுமையிழந்துள்ளனர். மதத் தலைவர்களுக்கு கூட கட்டுப்படும் நிலைமையில் அவர்கள் இல்லை.

ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்திலுள்ளனர். மக்கள் அடுத்து என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்று கூற முடியாது.

அடுத்த மாதம் கருப்பு ஜூலையாக பதிவாகக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. இதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

ராஜபக்சக்களுக்கு கடும் தண்டனை

நாட்டை இவ்வாறு வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை செய்ய மாட்டார். மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களிலிருந்தும் கூட இந்த அரசாங்கம் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஆட்சியாளர்களை பதவி விலக்குவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடனான நட்புறவில் இல்லை. அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும். அதற்கான இயலுமை இந்த அரசாங்கத்திடமில்லை என்றார்.