“எரிபொருள் இறக்குமதியில் ராஜபக்ச குடும்பத்தின் தலையீடு”

எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி நடவடிக்கைகளில் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் கடும் தலையீடுகளை மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் தலையீட்டை நிறுத்த வேண்டும்

கொழும்பில் 43வது படைப்பிரிவு அமைப்பு நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் இந்த தலையீட்டை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பல்வேறு இடங்களில் பல விதங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, இலங்கைக்குள் உரிய முறையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் ஊடாக அதனை செய்ய வேண்டும்.

நட்பு நாடுகளுடன் வெளிப்படைத்தன்மையாக இதனை முன்னெடுக்க வேண்டும். இதில் ராஜபக்ச குடும்பத்தினர் தலையிடக் கூடாது.

அண்மையில் இலங்கைக்கு கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று, இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் விண்ணுக்கு செய்திமதியை அனுப்ப உதவி நிறுவனம்.

நாட்டை இரத்த ஆறாக மாற்றாது ஜனாதிபதி பதவி விலக வேண்டும்

மக்கள் கிளர்ந்து எழும் இடத்திற்கு கொண்டு வந்து, நாட்டை இரத்த ஆறாக மாற்றாமல், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்.

அவர் பதவி விலகிய பின்னர் அந்த இடத்திற்கு தெரிவு செய்யப்படுவர் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றத்தை கூட்டி, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.

அத்துடன் கட்டாயமாக சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, உரிய வேலைத்திட்டத்தை தயாரித்து, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் முறையை ஏற்படுத்தி, திகதியை நிர்ணயித்து தேர்தலை நடத்த வேண்டும். இதில் எந்த தவறும் எமக்கு தெரியவில்லை எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

 

 

Tamilwin