IMF பச்சைக்கொடி காட்டினால் இலங்கைக்கு மேலும் பல நாடுகள் உதவும்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டினால் மேலும் பல நாடுகள் உதவ தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தை பொறுத்தே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 29ம் திகதி காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாடு வீழ்ச்சியடைந்துள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடி தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் செய்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடிகள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை, ஆனால் மிகவும் பின்தங்கிய மக்களுக்கான உடனடி நிவாரணம் எப்படி வழங்குவது என்பது பற்றி அவர் கூறினார்.

நாடு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி, புதிய பிரதமரை நியமித்து, நாட்டின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பொறிமுறையை உடனடியாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

 

 

Tamilwin