இலங்கைக்கு தொடர்ச்சியான உதவ தயார் – ஜப்பான் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் அதேவேளையில் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (ஜூலை 01) சந்தித்த போது இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki இதனைத் தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஜப்பான் அளித்து வரும் ஆதரவிற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தனது ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், எனவே இலங்கைக்கு இந்த நேரத்தில் ஆதரவளிக்காது என்றும் ஜப்பான் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை நேற்று சந்தித்த கொழும்பில் சந்தித்த போது ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், அவ்வாறான கருத்து எதனையும் ஜப்பானிய தூதுவர் குறித்த சந்திப்பில் வெளியிடவில்லை என்று ஜப்பானிய தூதரகம் பிரதமர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamilwin