உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வரும் இலங்கையின் நிதி முறைகேடுகள் வழக்கு!

நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான முகாமைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், ஜூலை 27 ஆம் திகதியன்று உயர்நீதிமன்றின் முழுமை அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரெட்னா உட்பட்ட மூன்று பல்கலைக்கழக கல்வியாளர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மனுக்களை இன்று அழைத்த, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எல்.டி.பி தெஹிதெனிய, நீதியரசர் யசந்த கோதாகொட ஆகியோர் அவற்றை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஜூலை 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்கள்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன், கல்வியாளர்களான சூசையப்பு நெவிஸ் மொரைஸ் மற்றும் கலாநிதி மஹிம் மெண்டிஸ் ஆகியோர் தமது மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச,ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரின் பெயர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் வரி குறைக்கப்பட்டமையே நாட்டின் பொருளாதாரத்தின் இன்றைய அவல நிலைக்கு முக்கிய காரணம் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாறு காணாத பொருளாதாரச் சேதம்

இந்த வரிக் குறைப்பினால், நாடு மிகப்பெரிய மற்றும் வரலாறு காணாத பொருளாதாரச் சேதத்தை சந்தித்துள்ளதாகவும், குடிமக்கள் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், தீவிர பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உச்சகட்ட விகிதத்தில் அதிகரித்து வருவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் விவகாரங்கள் தொடர்பில் கணக்காய்வொன்றை நடத்தி இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட நட்டத்தை தீர்மானிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

 

 

Tamilwin