போராட்டம் எதிரொலி – பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ரணில் பதவி விலக கோரி கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. பிரதமர் மற்றும் அதிபர் இல்லங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது. கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியது.

மேலும், சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட்த்திலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் நலன் கருதி ராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

mm