ஜனாதிபதி பதவிக்கான போட்டி களத்தில் சஜித்

தற்போது வெற்றிடமாக உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு தான் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையும், பெரும்பான்மையை கோட்டாபய ராஜபக்ச வைத்திருப்பதையும் இது காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் நாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியேறினார்.

ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி

இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக  விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி தெரிவிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு தான் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

-tw