சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின.
இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சன் ஷாவோ கூறியுள்ளார்.
இதனால், வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனா, கடந்த ஜூனில் இருந்து கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தம் 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலை சாதனை பதிவை கடந்து உள்ளது.
அவற்றில் லிங்ஷூ நகரில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வருகிற 26ந்தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும். நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீனாவின் சில நகரங்களில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா தொற்றுகள் என இருவகையான சவால்களை சந்திக்க வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர். சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்நாட்டின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமுடன் பரவி வருகிறது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஷாங்காய் நகரில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா தடுப்பு பணிகள் தற்போது மிக தீவிரமுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.
-mm