கோட்டாபயவை கைது செய்யுமாறு வலியுறுத்தி லண்டனில் அணிதிரண்ட தமிழர்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி தலைநகர் லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் தமிழ் மக்களினால் போராட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போர் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுத்து வருகின்றது.

கோட்டாபய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் என தெரிவிக்கின்றது.

அத்துடன், ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது.

இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோட்டாபய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

 

-tw