சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றில் அதற்கான வேட்புமனு கோரப்பட்டது.
இதன்போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அலகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார். அதனை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார்.
இதேவேளை, அமைச்சர் தினேஸ் குணவர்தன பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை முன்மொழிய, அதனை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்திருந்தார்.
மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.
இந்த வேட்பாளர்கள் மூவரினதும் வேட்புமனுக்கள் 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க அதிபர் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் அதிபர் பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளதுடன், புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
டலஸுக்கு பெருகும் ஆதரவு
இந்நிலையில், நாளைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தமது ஆதரவு யாருக்கு என்பதை அனைத்து கட்சிகளும் அறிவித்த வண்ணம் உள்ளனர்.
குறித்த கட்சிகளின் அறிவிப்பின்படி பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவு பெருகியிருப்பதாக தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி
இந்நிலையில், அதிபர் வேட்பாளரான டலஸ் அலகப்பெருமவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அக் கட்சியின் தவிசாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி
சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி
நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற அடிப்படையில், அதிபர் பதவிக்கான வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இலங்கை மக்கள் காங்கிரஸ்
இலங்கை மக்கள் காங்கிரஸ் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த டலஸ் அழகப்பெரும
டலஸ் அழகப்பெரும மாத்தறை மாவட்டம் திக்குவெல்ல பகுதியை சேர்ந்தவர் .
கடந்த 1994 ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சமுர்த்தி, கிராம மேம்பாடு, நாடாளுமன்ற விவகாரங்கள், மலையக அபிவிருத்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2001ம் ஆண்டு தேர்தலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2005 ம் ஆண்டில் இல் லக்சுமன் கதிர்காமர் கொல்லப்பட்டதை அடுத்து, டிசம்பர் 19 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் மூலம் டலஸ் மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்பு கடந்த 2007 இல் மகிந்தவின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2010 தேர்தலை அடுத்து இவர் மீண்டும் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் சென்றார். அப்போதைய அமைச்சரவையில் இளைஞர் விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அதிபர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அப்பதவியை வகிக்ககவும், அதிபருக்கு அதைக அதிகாரங்களை வழங்கவும் கொண்டுவரப்பட்ட 18-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்தார்.
2015 இல் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் 19-ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்தார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
2020 ஆம் ஆண்டு தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெருமுனவின் வேட்பாளராக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றதுக்கு தெரிவானார் .
இதன் போது அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கக்கூடிய 20-ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
-ibc