ஆகஸ்டு 11-ம் தேதி வரை தங்கலாம்- கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அனுமதி

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது. ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், கடந்த 9-ந்தேதி அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து கடந்த 13-ந்தேதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். அங்கும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால் மறுநாள் (14-ந்தேதி) சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசாங்கம், கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளார். அவர் அடைக்கலம் கேட்கவில்லை என்றும் அவர் சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

அவர் சிங்கப்பூரில் தங்கிருப்பதற்கான அனுமதி நாளையுடன் முடிகிறது. இந்தநிலையில் சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே தங்குவதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது. அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித் தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனா கூறும்போது, கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி னசொறதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார் என்று நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-mm