அரச கட்டடங்களை கைப்பற்றி சண்டித்தனம் செய்ய முற்பட்டால் கை கால்கள் உடைக்கப்படும் – போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை!

அமைதிவழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எல்லோருக்கும் அனுமதியுண்டு. ஆனால் சண்டித்தனம் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது என முன்னாள் இராஜங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்  அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடாபில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

போராட்டக்காரர்கள் அன்பு வழி போராட்டமொன்றை முன்னெடுப்பதாயின் அதற்கு எந்தத் தடையும் இல்லை. தாம் விரும்பியவாறு அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.

போராட்டக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை

அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனை விடுத்து சண்டித்தனம் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், அலரி மாளிகை என்பவற்றை கைப்பற்ற முயன்றால் அவர்களின் கை, கால்களை உடைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்றும் சனத் நிஷாந்த மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடல் மைதானத்திலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனையடுத்து கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 22 பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

-tw