இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்

கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வர்த்தக சம்மேளனம் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் ஒப்புதல் கிடைத்தால் மாத்திரமே, நிதி உதவியையும் வழங்குவதற்கு ஏனைய நாடுகள் முன்வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் உள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பிரதிநிதிகளை தமது சம்மேளனம் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்சேய் (Taisei) கூட்டுத்தாபனம் இலங்கையை விட்டு வெளியேறத் திட்டம்

இதன்போது ​​சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் இல்லாமல் கணிசமான அளவு உதவிகளை தாம் வழங்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் துமிந்த ஹுலங்கமுவ மேலும், தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 திட்டத்திற்கான ஒப்பந்ததாரரான ஜப்பானை தளமாகக் கொண்ட தாய்சேய் (Taisei) கூட்டுத்தாபனம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெர்மினல் 2 திட்டத்தின் நான்கில் ஒரு பங்கே முடிவடைந்துள்ள நிலையில் ஒப்பந்தக்காரரை வெளியேறாமல் வைத்திருக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. எனினும, அந்த கூட்டுத்தாபனத்தினர் நாட்டில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் தரவின்படி. 2021 டிசம்பர் இறுதியில் இலங்கை நிலுவையில் உள்ள ஜப்பான் கடன் தொகை 621 பில்லியன் ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

-tw