இலங்கை வரும் சீன விஞ்ஞான ஆய்வு கப்பல்! உறுதிப்படுத்திய அரசாங்கம்

சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் இலங்கைக்கு வரும் செய்தியை இலங்கை அரசாங்கம்உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டையில் தரித்திருக்கும் எனவும், முக்கியமாக எரிபொருள் உள்ளிட்ட நிரப்புதல்களுக்காக, அது துறைமுகத்தில் தரித்திருக்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒரு சீன ஆராய்ச்சிக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகை பற்றிய செய்திகளை முன்னதாக மறுத்திருந்த இலங்கை அரசாங்கம், புதுடில்லியின் கடும் கருத்துக்களை அடுத்து, இன்று அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இந்த கப்பலின் வருகை,இந்த வார தொடக்கத்தில் புது தில்லியில் கவனத்தை ஈர்த்தது.

சீன கப்பல்களின் வருகையை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அரிந்தம் பாக்சி, ‘இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் கொண்ட எந்தவொரு வளர்ச்சியையும் கவனமாகக் கண்காணிக்கிறது என்று கூறியிருந்தார்.

எனினும் சீனா தனது சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை ‘சம்பந்தப்பட்ட தரப்புக்கள்’ தவிர்க்கும் என்று நம்புவதாக, சீனா தெரிவித்திருந்தது.

எனினும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சு ஏன் கப்பலின் வருகையை முன்னதாக மறுத்தது என்பதை விளக்கவில்லை என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இத்தகைய கப்பல்கள் அவ்வப்போது வருகின்றன. இது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. எவ்வாறாயினும், புவிசார் மூலோபாய ஆய்வாளர்கள், கொழும்பிற்கும் புது தில்லிக்கும் இடையே கடந்தகால பதற்றங்களை கருத்தில் கொண்டு இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்பாக 2014 இல் சீனாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்த பின்னரே, இவ்வாறான கப்பல்களின் வருகையை இந்திய தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

 

 

-tw