தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில்

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும், ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவமயமாக்கல் கண்டிக்கத்தக்கது

“நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் நிலையில், வடமராட்சியிலுள்ள வல்லைவெளியிலே இராணுவத்தினர் உணவகங்கள் மற்றும் கட்டிடங்கள் அமைப்பதற்கான தேவை என்ன? வடக்கிலே இராணுவமயமாக்கல் எனும் விடயம் கண்டிக்கத்தக்கது.

நாட்டில் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் கோட்டாபய அரசாங்கம் இராணுவத்தின் மூலம் தீர்வு காணலாம் என நம்பிக்கை கொண்டிருந்தனர். அது போன்ற சூழ்நிலைதான் இன்றும் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக இராணுவ விஸ்தரிப்பு செய்தமையும் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணம்.

உலகளவில் நாடு ஒத்துழைப்பை பெறாமல்போனமைக்கு மனித உரிமைமீறலும் இராணுவமயமாக்கலுமே பிரதான காரணம்.

கடந்த காலத்திலே சீன அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தான்தோன்றித்தனமான அபிவிருத்திகளும் நடவடிக்கைகளும் தான் தற்போதைய நெருக்கடிக்கும் நாடு கடன் சுமையில் இருப்பதற்கும் காரணம்” என்றார்.

 

 

-ibc