சுன்னாகம் இளைஞன் சித்திரவதை வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞரொருவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி உட்பட சில பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2017 வைகாசி மாதம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த வழக்கில் சிரேஸ்ட பிரதி மன்றாடியார் குமார ரட்ணம், அரச சட்டவாதி நிசாந்தன் ஆகியோர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் சித்திரவதை குற்றச்சாட்டை என்பித்ததையடுத்து நீதிபதியினால் தண்டனை தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில், 25.07.2022 சுன்னாகம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார, மேன்முறையீடு மனுவை மீளப்பெற்றிருந்தார்.

இதனையடுத்து மேன்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, 2017 வைகாசி மாதத்திலிருந்து தண்டனை தீர்ப்பினை நடைமுறைப்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.