சீன ஆய்வு கப்பலான யுவாங் வாங் 5 இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் இராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை, இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனக் கப்பல், 2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு, இலங்கையின் இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மேலதிக ஆலோசனைகள் காரணமாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் இந்த கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம் அமைச்சு கோரியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவையும் சிறந்த உறவுகளையும் உறுதிப்படுத்த விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
அண்மையில் கம்போடியவில் நடைபெற்ற நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது இரண்டு வெளிவிவகார அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் வாங் யீ ஆகியோர் இதனை மீண்டும் வலியுறுத்தினர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான இந்த முதலாவது சந்திப்பின் போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் நிலையான கோட்பாடாக உள்ள ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பை அமைச்சர் சப்ரி வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-tw