சர்ச்சையை கிளப்பியுள்ள சீன ஆய்வுக்கப்பல்..! இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச கடலில் நிலை கொண்டுள்ள சீனாவின் ‘யுவான் வாங் 5’ கணிக்கணிப்பு கப்பல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்படுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கண்காணிப்பு கப்பல் திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக ஓகஸ்ட் 16ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா எதிர்ப்பு

அதன் வருகையை ஏன் எதிர்த்தது என்பதற்கான “உறுதியான காரணங்களை” இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை தொடர்ந்து இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் முன்னராக ஓகஸ்ட் 11 ஆம் திகதியளவில் வரவிருந்தது ஆனால் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டதையடுத்து கப்பலின் வருகை தாமதமானது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இது குறித்து கவலை வெளியிட்டார்.

இதன்போது கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் கோரப்பட்டது.

உறுதியான காரணங்களை முன்வைக்காத அமெரிக்கா, இந்தியா

இதே கோரிக்கையை இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்திருந்தார்.

இரு தரப்பினரும் உறுதியான காரணங்களை முன்வைக்காததால், இலங்கை அரசாங்கம் சீனக்கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், கப்பலை நிறுத்துவது இலங்கை அரசுக்கு புவிசார் அரசியல் தலைவலியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

-ibc