சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் -நாடு கடந்த அரசாங்கம் குற்றச்சாட்டு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது ஸ்ரீலங்காவில் தடைநீடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறைதொடர்பான ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான ஸ்ரீலங்காவின் தடை நீக்கம், சர்வதேசத்தினை ஏமாற்றும் தந்திர விளையாட்டு எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 இன் கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கும் 18 அமைப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 316 நபர்கள் மற்றும் 6 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீரிஸ் வெளியிட்ட தகவல்

கடந்த ஜூன் 13 ஆம் திகதியன்று, ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் உரையில், 2012 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர்

அடுத்த சில வாரங்களின் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த பட்டியல் வெளிவந்துள்ளது. இது சர்வதேசத்தினை ஏமாற்றும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டையே வெளிக்காட்டுவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது.

எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தொடரும் தடை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் ஸ்ரீலங்காவின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது

 

 

-ibc