இளைஞர்களை இந்த அரசாங்கம் வேட்டையாடுகிறது..! சஜித்

இந்நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய புரட்சியை முன்னெடுத்ததாகவும் அதன் விளைவாகவே நாட்டை அதல பாதாளத்தில் தள்ளிய அதிபரை பதவியில் இருந்து அகற்ற முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனினும், அந்த பாரிய புரட்சியையும், மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த இளம் தலைமுறையினருக்கு எதிராக அரச அடக்குமுறை ஏவப்படுவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் அவர்களை வேட்டையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (22) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இளைஞர் சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடலில் கருத்துரைக்கும் போதே சஜித் பிரேமதாச இந்த விடயத்தினை தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும்

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” இன்று இளைஞர்களை வேட்டையாடும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வசந்த முதலிகே உள்ளிட்ட பலருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்க அதிபரும் அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமது சொந்த அரசியல் கருத்தை முன்வைக்கும் தவறுக்காக அரசாங்கம் இளைஞர்களை இப்படி நடத்துகிறதா..? அரச பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும்.

அநீதிக்கும், அநியாயத்துக்கும், அடக்குமுறைக்கும் எதிராக முன்நிற்கும் இளைஞர் சமூகத்துடன் ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் ” எனக் குறிப்பிட்டார்.

 

 

-ibc