தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்: ரஞ்சன் ராமநாயக்க

“தான் அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்“ எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று வெளியேறும் போதே ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“தாம் சுதந்திரமாக இருந்து மக்கள் பக்கம் செல்வதாகவும், இந்த நாட்டின் அப்பாவி மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளையும் தான் தொடருவேன்” எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு

2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

-tw