சீன ஆய்வு கப்பலால் மீண்டும் வெடித்தது சர்ச்சை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் 5 தற்போது இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் The Hindu நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த கப்பல், சீனாவிலுள்ள ஜியாங்யின் துறைமுகத்திற்கு நேரடியாக செல்வதாகவே அறிவிக்கப்பட்டது. எனினும், ஹம்பந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல்

இலங்கையின் தென் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிலைகொண்டு, ஆய்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கப்பல், ஜியாங்யின் துறைமுகத்திற்கு செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்திற்கு செல்லுமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் வருகை தருவதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

புறப்பட்டுச் சென்ற கப்பல்

எனினும் இந்திய எதிர்ப்பு மற்றும் இலங்கை அரசின் கோரிக்கயையும் மீறி குறித்த கப்பலானது இலங்கையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பிற்கு 12ம் திகதி வருகை தந்தது.

இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் தமது கப்பல் எவ்வித ஆராய்ச்சியிலும் ஈடுபடாது என சீன தரப்பால் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி துறைமுகத்திற்குள் பிரவேசித்திருந்தது.

தொடர்ந்நது 07 நாட்கள் தங்கியிருந்த குறித்த கப்பல் கடந்த 22 ஆம் திகதி இலங்கை துறைமுகத்திலிருந்து வெளியேறி சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

-ibc