இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் பிரேவேசிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாக இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வீரேந்திர சிங் பதானியா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 160 ற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் நாட்டை சென்றடைந்துள்ளனர்.
கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பணி
இந்த நிலையில் இந்தியாவிற்குள் இலங்கையர்கள் வருகைதருவதை தடுப்பதற்காக படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மக்கள் வருகைதருவதை தடுப்பதை உறுதி செய்வதே தமது அடிப்படைப் பணி என இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வீரேந்திர சிங் பதானியா கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக வருகைதருவோர் ஆழமற்ற மணல் திட்டுக்களில் தொடர்ந்து இறங்கினால், மனிதாபிமான உதவிகளை வழங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோந்துப்பணி
தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்காணிப்பு நோக்கங்களுக்காக Hovercraft எனப்படும் படகானது பயன்படுத்தப்படும் எனவும் இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
-ibc