இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள் சர்வதேச ரீதியில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம் தரவில்லை என மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் சகாயம் திலீபன் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர் நேற்று(30) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களிலும் பின்னரான காலங்களிலும் வெள்ளை வேன் கடத்தல், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், அரசாங்க படைகளால் கடத்தப்பட்டவர்கள்,வயது வித்தியாசம் இன்றி இலங்கை அரசாங்க தரப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு போவதை பார்க்கின்றோம்.
இலங்கை அரசாங்கம்
இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்ப கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச் செய்தல் எனும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும் உறவுகளை தொலைத்துவிட்டு பலர் உள்ளனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர் பார்ப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான முறையில் ஒரு பொறிமுறையாவது முன்வைக்கவில்லை. இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையை நோக்கியதாகவே அமைந்திருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற கடந்த அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் அல்லது நீதியான விசாரணைகளுக்கான எந்த முன்னெடுப்புகளும் இதுவரை எட்டப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
பிள்ளைகளை தேடிய நியாயமான தேடல்
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின் நாட்களில் இருந்து இன்று வரை 115 க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடிய நியாயமான தேடலில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணத்துள்ளனர்.
இவர்களது மரணம் சாதாரணமல்ல. வலிகளை சுமந்த சாட்சியங்கள் இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்படும் சந்தர்ப்பங்கள் தனி குடும்பங்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் அல்ல மாறாக இது யுத்தத்தின் ஒரு வகை தந்திரோபாய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
இறந்தவர்களுக்கு ஒரு நினைவேந்தல் செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக ஆறுதல் கிடைக்கும். ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது.
வலிகளின் கதைகள்
உண்மை நிலையை கண்டறிவதற்கான போராட்டத்தில் இன்று தனது உறவுகளின் முகங்களை மறந்த சின்னஞ் சிறார்களும், கடைசி காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்வதற்கு பிள்ளைகளின்றி வாழும் பெற்றோர்கள் என நீண்டுகொண்டே போகும் வலிகளின் கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எமது உறவுகள் செய்யும் அறவழி போராட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கான நீதி பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமைதி வழி போராட்டம்
மன்னாரில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவு தினத்தையொட்டி நேற்று(30) அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொதுமக்கள் தெரிவிக்கையில்,
யுத்தம் நிறைவடைந்து தசாப்தங்கள் கடந்து போனாலும் இன்று வரை எம் உறவுகளின் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதற்கு மாறி மாறி ஆட்சியேரும் எந்த ஒரு அரசாங்கமும் எம் நியாயமான போராட்டத்திற்கு உள்ளார்ந்த எந்தவித அக்கறையும் காட்டவில்லை.
இறுதிவரை காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் உயிரோட்டமான சாட்சியங்களும் அழிந்து போயுள்ளன.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தங்களின் பிள்ளைகளை தேடி திரியும் தாய்மார்களுக்கு இலங்கை அரசால் எவ்வித நண்மைத்தனங்களும் இல்லை.
மாறாக நீதிக்காக போராடும் தாய்மார்களின் மன நிலையினை அறியாத அரசாங்கம் அவர்களை கொடூரமாக தாக்கியும் அச்சுறுத்தியும் வயோதிப வயதான அம்மாக்களின் வலிகளையும் வேதனைகளையும் கொச்சைப் படுத்துகின்றனர்.
-tw