நீங்குகிறது பயங்கரவாத தடைச்சட்டம் – நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன், சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, தனது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

சக்திவாய்ந்த இலங்கை

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும். இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும்.

மக்கள் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. அதே வேளை இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது. 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்த சபை அமைய வேண்டும். இந்த வார இறுதிக்குள் தேசிய சபையை அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம். இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் “, எனக் குறிப்பிட்டார்.

 

 

-ibc