கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழைய எதிர்ப்பு

ஜூலை 9-ந்தேதி இலங்கையை விட்டு வெளியேறினார். கோத்தபய ராஜபக்சே கடந்த 3-ந்தேதி இலங்கை திரும்பினார். கொழும்பு : இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் பதவி விலகினர். கடந்த ஜூலை 9-ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார்.

ஜூலை 13-ந் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு 4 வாரங்கள் தங்கிய பிறகு தாய்லாந்து சென்றார். தனது குடும்பத்தினர் தங்கி இருக்கும் அமெரிக்காவுக்கு செல்ல அவர் விரும்பினார். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதனால் கடந்த 3-ந்தேதி இலங்கை திரும்பினார்.

இந்தநிலையில், புதிய லங்கா விடுதலை கட்சி என்ற அரசியல் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா பட்டரமுல்லாவில் நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் குமார வெல்காமா பேசியதாவது:- கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசியல் அறிவு கிடையாது.

அரசியலை அரசியல்வாதிகளிடமே விட்டுவிட வேண்டும். அவர் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவர் அரசியலில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நாம் கணித்தது சரியானதுதான் என்பதை கடந்த 2 ஆண்டுகால நிகழ்வுகள் நிரூபித்து விட்டன.

அவர் அரசியலில் மீண்டும் நுழைய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றி அவர் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று நான் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

-mm