இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

அமைதியான முறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் கையாள இலங்கை அரசாங்கம் வன்முறையைப் பின்பற்றுவதாக உலக நிறுவனம் கூறியது. அப்படிச் செய்வதை இலங்கை  உடனே நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியது.

இலங்கையின் வரலாறு காணாத பொருளியல் நெருக்கடிக்குக் காரணமானவர்கள் மீது அதிபர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிறுவனம் கூறியது. இலங்கையின் பொருளியல் நெருக்கடி குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் விடுத்துள்ள முதல் அறிக்கை இது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பல ஆண்டுக் காலம் நடந்த  உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும்  கொடுமைகள் குறித்தும் அறிக்கை சில கருத்துகளை முன்வைத்தது. போர்க்காலச் சித்திரவதைக்குப் பொறுப்பானவர்களை நீதியின்முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

அண்மை அறிக்கையில் நிறுவனம் மீண்டும் அதற்கு வேண்டுகோள் விடுத்தது. 2009இல் உள்நாட்டுப் போர் முடிவடையும் தறுவாயில் இலங்கை  ராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40,000 தமிழர்கள் மாண்டதாகக் கூறப்படுகிறது.

 

 

-smc