இலங்கையில் தனி நபரின் வாழ்க்கைச் செலவு! அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்

இந்நாட்டில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,137 ரூபா அவசியம் என மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவு வீதம் உயர்வு

கடந்த ஜூன் மாதம் ஒருவருக்கான ஒரு மாத வாழ்க்கை செலவு 12,444.00 ரூபாவாக கணிக்கப்பட்டதுடன். இம்முறை 5.57 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு தேவையான தொகை 52,552.00 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தில் அது 56,676.00 ரூபாவாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு அமைவாக மாறுபடும் வாழ்க்கை செலவு

இலங்கையில் ஒருவர் வாழ்வதற்கான வாழ்க்கை செலவு மாவட்ட ரீதியில் கணக்கிடப்பட்டுள்ளது.

அதற்கமைவாக அதிக செலவு ஏற்படும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனம்காணப்பட்டுள்ளதுடன் அங்கு ஒருவருக்கான ஒரு மாத அடிப்படை வாழ்க்கை செலவு 14,169.00 ரூபாவாகும்.

அத்துடன் மிகக்குறைந்த வாழ்க்கை செலவுடைய மாவட்டமாக மொணராகலை மாவட்டம் இனம்காணப்பட்டுள்ளதுடன் அங்கு வசிக்கும் ஒருவருக்கான ஒரு மாத வாழ்க்கை செலவு 12,562.00 ரூபா எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw