உக்ரைனில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர்

அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கிய நிலையில், உக்ரைனில் வசிக்கும் 16 மாணவர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் 2022 பெப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் உக்ரைனிய அதிகாரிகளின் ஆதரவுடனும் ஒருங்கிணைப்புடனும் திரும்பி வருவதற்கு வசதி செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், யுத்தம் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் உக்ரைனில் இருந்து இந்த நாட்டுக்கு வருவதற்கு தயாராக இருந்த இலங்கையர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டதாகவும் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

 

-tw