மரண தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியுமாயின் அரசியல் கைதிகளுக்கு ஏன் வழங்கமுடிவதில்லை: என்.நகுலேஸ் கேள்வி

எத்தனையோ கொலைக் குற்றவாளிகள், மரண தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியுமாயின் அரசியற் கைதிகளின் விடயத்தில் மாத்திரம் ஏன் பாரபட்சம் காட்டப்படுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெலிகடை சிறைச்சாலை அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளின் விடுதலை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெலிகடை சிறையில் உண்ணாவிரதம் இருந்த அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகவும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் எங்கள் ஆதரவினை வழங்கியிருந்தோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

இலங்கை அரசாங்கமானது திட்டமிட்டு தமிழர்கள் மீது வன்மத்தைத் திணிப்பதற்காகவும், அச்சுறுத்தல்களை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்று முழு இலங்கை மக்களையும் பாதிக்கும் சட்டமாக மாறியுள்ளது.

அன்று தமிழ் மக்கள் இந்தச் சட்டத்தினால் அவதியுறும் போது ஏனைய இனத்தவர்கள் கண்டும் காணாதவர்களாய், இன்புற்றும் இருந்தனர்.

ஆனால் இன்று அவர்களும் இந்தச் சட்டத்தினால் சிரமப்படுகின்றனர்.  அப்போது அவர்கள் செய்தது போல் தமிழ் இனம் செய்யாது. ஏனெனில் இந்தச் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது.

அந்த நிலைமை எவருக்கும் வரக் கூடாது என்று எம்மினம் சிந்திக்குமே தவிர நாங்கள் அவதியுற்றபோது இன்புற்றது போன்று இன்புற மாட்டோம்.

பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு என்று ஒரு மாயையைக் காட்டி கொண்டு வரப்பட்டது இந்தச் சட்டம்.

ஆனால், இன்று பயங்கரவாதமே நாட்டில் இல்லை, பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழித்துவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் எதற்காக தற்போதும் இந்தச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும்.

புலிப் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றிய காலம் போய் தற்போது மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை அடக்குவதற்காக இச்சட்டம் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றது.

எனவே இன்று தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதகமாக அமைந்துள்ள இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும்.

அத்துடன் அச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இன்றுவரை பல தமிழ் அரசியற் கைதிகள் எவ்வித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அவர்கள் அனைவரின் விடுதலைக்கும் பல உத்தரவாதங்கள் காலாகாலம் கொடுக்கப்பட்டு வருகின்றன அவை வெறுமனே வாய்ச்சொல்லிலோ அறிக்கையிலோ இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எத்தனையோ கொலைக் குற்றவாளிகள், மரணதண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியுமாயின் அரசியற்கைதிகளின் விடயத்தில் மாத்திரம் ஏன் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தில் சர்வதேசம் மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையும் காலம் கடத்திக்கொண்டு செல்லாமல் இதனை நிவர்த்திக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

-tw