தெற்கில் கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மக்கள்! எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருகின்றார்.

இந்த நிலையில், வடக்கில் உள்ள மக்கள் தமது சகோதரர்களுடன் தெற்கில் உள்ள கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெற்ற மகத்தான வெற்றி என காலிமுகத்திடலில் இன்று நடைபெற்ற நடமாடும் பிரசாரத்தில் கையொப்பமிடும் நிகழ்வின் போது சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனிதாபிமானமற்ற சட்டம்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கொடூரமான சட்டம் 1979 இல் ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்தது, அதை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் தமக்கு ஏற்படும் எதிர்ப்பிற்கு எதிராக பயன்படுத்த முடிந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா, தன்னுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் எவ்வாறு கொடூரமாக நடத்தப்பட்டதை, தான் நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.

எனவே அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள வேண்டிய நேரம் இது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கையெழுத்து போராட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அமைப்பின், நாடு தழுவிய ரீதியிலான இந்த பிரசாரம், காங்கேசன்துறையில் இருந்து நேற்று பிற்பகல் கொழும்பு வந்தடைந்ததுடன், காலிமுகத்திடலில் பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் தெற்கே ஹம்பாந்தோட்டை வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரசாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்படும். அதில் இதுவரை சுமார் 500,000 பேரின் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, முஜிபுர் ரகுமான், ஹிருணிகா பிரேமச்சந்திர, ஷானகியன் ராசமாணிக்கம், ரவூப் ஹக்கீம், திஸ்ஸ அத்தநாயக்க, சமூக ஆர்வலர்களான புபுது ஜாகொட, தர்மசிறி லங்காபேலி, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர். முதலாவது கையொப்பத்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பதிவு செய்துள்ளார்.

 

-tw