தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் – மாபெரும் உணர்வெழுச்சி நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு இறுதி நாள் நினைவேந்தல், இன்று காலை 10 மணியளவில் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் மிக உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

சுதந்திர விடுதலைகோரி தியாகதீபம் திலீபன் ஆகுதியான நினைவிடத்தில் 10.48 மணியளவில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுடரேற்றி அஞ்சலி

தியாகதீபம் திலீபனுக்கு பொதுச் சுடரினை, ஈழ யுத்தத்தில் இரண்டு கண்களும் இரண்டு கைகளையும் இழந்த முன்னாள் போராளி சேகரட்ணம் ராகவன் ஏற்றி வைத்துள்ளார்.

அதன் பின்னர் நல்லூரின் வடக்கு வீதியில், ஈகைச் சுடரினை விடுதலைப் போரில் வீரமரணமடைந்த 2ம் லெப்டினனின் தந்தை சின்னப்பு பூபாலன் ஏற்றி வைத்தார்.

அதனையடுத்து போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை தமிழ்த்தேசிய மாவீரர் பணிச்செயலகத்தின் ஏற்பாட்டில் கைதடியில் இருந்து நல்லூர் தியாகதீபம் நினைவிடம் வரை தூக்குக் காவடி எடுத்து வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

-ibc