ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டும் வரை நாடு முன்னேறாது – சஜித்

ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை நாடு முன்னேற்றமடையாதெனவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கலிகமுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களை அணுகாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது.

ராஜபக்சர்களின் கைக்கூலியாக ரணில்

அரசாங்கத்தால் மக்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே மக்களுக்குப் பயந்து போயுள்ளனர். இந்த அரசு மக்களின் வாழும் உரிமையைக் கூட பறிப்பதற்காக செயற்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தில் எவரும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர்களின் வாயிற்காவலரான ரணில் தான் நாட்டை ஆள்கிறார். அவர் ராஜபக்சர்களின் கைக்கூலியாக செயற்படுகிறார். எனவே ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை நாடு முன்னேற்றமடையாது.

கடுமையான அடக்குமுறை

பயங்கரவாத தடை சட்டத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை கடுமையாக அடக்குமுறைப்படுத்துகின்றனர். அந்த அடக்குமுறையை இன்னும் அதிகரிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட வலயங்களை உருவாக்கி வருகின்றனர்.

சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டி இருந்த போதிலும், தடை செய்யப்பட்ட எல்லைககைளை நாட்டில் சட்டவிரோதமாக திணித்துள்ளனர்” என்றார்.

 

 

-ibc