ஜப்பானியர்களின் மாறுபட்ட கருத்துகளுக்கு இடையே நடந்த ஷின்ஸோ அபேயின் இறுதிச் சடங்கு

ஜப்பான் தனது முன்னைய பிரதமர் ஷின்ஸோ அபேக்கு (Shinzo Abe) அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கை நடத்திப் பிரியாவிடை அளித்துள்ளது.

பெரும் பொருட்செலவில் நடத்தப்படும் இறுதிச் சடங்கு குறித்து ஜப்பானியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவும்போதும் சடங்குகள் பெரிய அசம்பாவிதமின்றி நடைபெற்றன.

67 வயது அபே கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். 19 பீரங்கிக் குண்டுகள் முழங்க அவரது இறுதிச் சடங்கு தொடங்கியது. அபேயின் மனைவி அக்கி அவரது அஸ்தி அடங்கிய கலசத்தை எடுத்துச் சென்று கிஷிடாவிடம் வழங்கினார்.

பட்டுத் துணியால் போர்த்தப்பட்டிருந்த கலசம், பின்னர் வெண் செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாடத்தில் வைக்கப்பட்டது. ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் அதிகாரத்துவ இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி-ஆகியோர் அவர்களில் சிலர். ஜப்பானிய அரச குடும்பத்தாரும் அஞ்சலி செலுத்தினர்.

கிஷிடாவும் அரசாங்க அதிகாரிகள் சிலரும் நிகழ்ச்சியில் புகழுரை ஆற்றினர். மறைந்த தலைவரோடு தாங்கள் பணியாற்றிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அபே துணிவுமிக்க மனிதர் என்று கிஷிடா வருணித்தார். ஜப்பானின் அரசதந்திர உறவை வலுப்படுத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள் திரு. அபேயின் முக்கியச் சாதனை என்றும் அவர் பாராட்டினார். இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்துக்கு வெளியே பொதுமக்கள் பல்லாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

3 கிலோமீட்டர் தொலைவுவரை அவர்களின் வரிசை நீண்டிருந்தது. அதற்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு செலவுமிக்க இறுதிச் சடங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அபேயின் இறுதிச் சடங்குக்காகச் சுமார் பத்தே முக்கால் மில்லியன் டாலர் செலவிடப்படுவது அவர்களுக்குச் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்னும் சிலர், அரிதாக வழங்கப்படும் அரச இறுதி மரியாதைக்கு அபே தகுதியானவர் அல்லர் எனக் கருத்துக் கூறினர்.

 

-smc