ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக களமிறங்க மோடிக்கு அழுத்தம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு

அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டுமென ஐ.நாவில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள வைகோ இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவை இந்தியா முன்மொழியவேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை திரட்டி வரும் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் பணிக்கு இந்திய நிதியுதவி செய்ய வேண்டுமென வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

-ibc