இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு இறுதிப்போரில் மறைக்கப்பட்ட ஈழத்தமிழர்களது உண்மைகளையும் ,போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும், போரினால் ஏற்பட்ட பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூலொன்று வெளியிடப்படவுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தின் ஏற்பாட்டில் இங்கிலாந்தில் சனிக்கிழமை 22 ஆம் திகதி ( நாளை ) மாலை நான்கு மணிக்கு College Rd, Harrow HA1 1BA என்ற இடத்தில் அமைந்துள்ள Harrow Baptist Church மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சர்வதேச ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒளிப்படங்களில் இருக்கும் போராளிகள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூலில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்
இந்த நூலில் கலைஞரும், சுயாதீன ஊடகவியலாருமான அமரதாஸினால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற இடங்களையும் ‘பாதுகாப்பு வலயம்’ (No Fire Zone) என்று அறிவிக்கப்பட்டிருந்த இடங்களையும், அறிந்துகொள்ளக்கூடிய வகையில் 400 பக்கங்களில், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் வரலாறு சார்ந்த ஆவணங்களும் இலங்கை இறுதிப் போர்க்காலத்தின் ‘போர்க்குற்றங்கள்’ பலவற்றை உறுதி செய்யக்கூடிய ஆவணங்களும், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதாரங்களாக அமையக்கூடிய ஆவணங்களும், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களும் இணைய வெளிகளில் இருந்து அழிக்கப்பட்டு வருகின்றன.
அத்தகைய செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில், ஒளிப்படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று பதிவாகியுள்ளது.
போர் அனுபவம்
இந்த நூல் தொடர்பில் நூலாளர் அமரதாஸ் குறிப்பிட்டுள்ளதாவது,
“இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களோடு கூட இருந்து சுயாதீன ஊடகராக இயங்கிய அனுபவங்களுடனும் பாரபட்சமற்ற நிதானத்துடனும் ‘சாட்சி நிலை’ நின்று இந்த ஒளிப்படப் பெருநூலை உருவாக்கியிருக்கிறேன். என் வாழ்வின் மகத்தான பணிகளில் ஒன்றைப் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு நிகழ்த்தி நிறைவுசெய்திருப்பதாக நம்புகிறேன்.
இது, இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பிலான அனைத்துத் தரவுகளையும் கொண்ட, ‘முழுமையான’ வரலாற்று நூல் அல்ல. இறுதிப் போர் சார்ந்த உண்மைத் தரவுகளையும் மறுதலிக்க முடியாத காட்சி ஆதாரங்களையும் கொண்ட வலுவான வரலாற்று ஆதார நூலாக இது அமைந்திருக்கும். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வலிகளையும் தேவைகளையும் மெய்யான வரலாற்றையும் காட்சிக் கலை மூலம் சர்வதேச சமூகங்கள் மத்தியில் எடுத்துரைப்பது, இந்த ஒளிப்பட நூலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
எனது ஒளிப்படப் பெருநூலானது பொதுவெளிக்கு வந்து பரவலாக்கம் பெற்ற பின்னர், அது சார்ந்து பேசுவதற்குப் பல விடயங்கள் இருக்கின்றன. நூலில் நான் சேர்த்திருக்கும் ஒளிப்படங்கள் சார்ந்த கதைகள், நினைவுகள், அனுபவங்கள் குறித்துப் பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்ள முடியும். நல்லெண்ணத்துடன் என்னை அணுகக்கூடிய யாரோடும் எது குறித்தும் உரையாடத் தயாராக இருக்கிறேன். உரையாடல் தொடரும்…” என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழர்களின் வரலாற்றினை எடுத்துக்கூறும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்நூலினை நிகழ்வின் போது வாங்கிக்கொள்ள முடியும் எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
-tw