பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கான போட்டி – இரண்டு முக்கிய வேட்பாளர்களும் சந்தித்தனர்

பிரிட்டனில் அடுத்த பிரதமர் பதவியைக் கைப்பற்ற முனையும் இரண்டு முக்கிய வேட்பாளர்கள் நேரில் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

முன்னைய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த திரு. ரிஷி சுனாக் (Rishi Sunak) இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டதாக லண்டனில் The Sun நாளேடு கூறியது.

வேறு விவரம் இல்லை. ‘ரகசிய உச்சநிலை’ என்று அந்தப் பத்திரிகை அந்தச் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டது.

பிரதமர் லிஸ் டிரஸ் 45 நாள்களே பதவியில் இருந்தார். அவருக்குப் பதிலாகப் பதவியைக் கைப்பற்ற ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மூன்று பேர் மும்முரமாக முயன்று வருகின்றனர்.

முன்னைய தற்காப்பு அமைச்சர் திருவாட்டி பெனி மோர்டோண்ட் (Penny Mordaunt) வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ரிஷி சுனாக், போரிஸ் ஜான்சன் இருவரும் இன்னமும் வெளியே சொல்லவில்லை.

ரிஷி சுனாக் ஆக அதிகமாக 128 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாக BBC கூறுகிறது. குறைந்தது 100 பேரின் ஆதரவு தேவை.

மூன்று மாதத்துக்கு முன் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னைய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிநாட்டில் விடுமுறையில் இருந்தார். அவர் அவசரமாக நாடு திரும்பியிருக்கிறார்.

அவருக்கும் 100 ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 650 பேர் கொண்டது பிரிட்டிஷ் நாடாளுமன்றம். கன்சர்வேடிவ் கட்சிக்கு 357 பேர் உள்ளனர்.

யார் புதிய பிரதமர் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

 

 

 

-smc