நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தினை கையெழுத்திட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நெதர்லாந்துடன் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், நெதர்லாந்து அரசாங்கத்துடன் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் நெதர்லாந்திற்கும் நேரடி விமான சேவையைத் ஆரம்பிக்க உதவும் எனவும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1951 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமானங்கள் எதுவும் இயங்கவில்லை எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இலங்கை ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறைகளின் முக்கிய ஆதார சந்தைகளில் ஒன்றாக நெதர்லாந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில், நெதர்லாந்து இலங்கை சுற்றுலாவின் 14வது பெரிய சந்தையாக காணப்படுகிறது.
மேலும் ஏற்றுமதியை பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை ஏற்றுமதிக்கான முதல் ஐந்து சந்தைகளில் நெதர்லாந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ift