பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ரீயூனியன் தீவுகளில் தஞ்சம் அடைந்திருந்த இரண்டு இலங்கையர்களும், சட்டவிரோதமாக ஜப்பானில் வசித்து வந்த மற்றுமொருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
படகு மூலம் ரீயூனியன் தீவை அடைந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழையத் தயாரான இரண்டு இலங்கையர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ, பளுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும், பங்கதெனியவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவருமே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், 2018ஆம் ஆண்டு இறுதியில் சிலாபத்தில் இருந்து படகு மூலம் ரீயூனியனுக்கு சென்றதாகவும், பல்வேறு காரணங்களை கூறி அண்மைக்காலம் வரை அங்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் ஜப்பானுக்குள் நுழைந்து 11 வருடங்களாக அங்கு வசித்து வந்த ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு இரகசியமாக ஜப்பானுக்குச் சென்ற 37 வயதுடைய இவர், நொச்சியாகம, உடுநுவர குடியிருப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானுார்தி நிலையத்தை வந்தடைந்தவுடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-tw

























