வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் பலவீனத்தைக் காட்டாதீர்! – எதிரணியைக் கிண்டலடிக்கும் தினேஷ்

அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் பலவீனங்களைக் காட்ட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொழும்பில் கடந்த 2ஆம் திகதி அரசுக்கு எதிராக எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அது உண்மைதான். ஆர்ப்பாட்டங்களுக்கு யார் தலைமை தாங்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்குள் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகளில் ஒரு தரப்பினர் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்திருந்தனர்.

மக்கள் எவரும் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்த வீதிக்கு வருவதில்லை. எதிரணி அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும்தான் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வீதிகளில் சுற்றித் திரிகின்றனர்.

நவம்பர் 2 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள் மேற்கொள்ளாமல் பொலிஸார் முடிவுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

எனவே, ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டு அரசுடன் கைகோர்த்து நாட்டை மீளக்கட்டியெழுப்ப முன்வருமாறு எதிர்க்கட்சிகளிடம் நாம் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.

 

 

 

-tw