மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழுவொன்று சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகும் நவம்பர் 18ஆம் திகதி உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கான ஆதரவை வரவேற்றுள்ள இலங்கை சிவில் சமூக ஆர்வலர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து, அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிக்கவும் இலங்கை அரசாங்கத்திற்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

150 சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் 75 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் ஊடாக நவம்பர் 15ஆம் திகதி  இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அரச அடக்குமுறை

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தமது பதவி விலக காரணமான அண்மைய மக்கள் எழுச்சியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழில் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் பங்களிப்பை நினைவு கூறும் கடிதத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி பொருட்கள் மற்றும் சேவைகளின் தாங்கிக்கொள்ள முடியாத விலை அதிகரிப்பு, மோசமான நிர்வாகம், ஊழல் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் இப்போது தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான தயார் நிலை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் உக்கிரமடைந்துள்ள அரச அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்கள் கோருகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் நாட்டில் பொது இடங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில், இராஜதந்திர சமூகம், கருத்து சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வமான வழிமுறைகள், மனித உரிமைகள் வழிமுறைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் தலையீட்டையும் கடிதம் பாராட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி

சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அவரது திட்டம் குறித்து நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்பையும், கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் ஒன்றுகூடுவதையும் நசுக்குவதற்கு அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் அங்கீகாரம் வழங்க முடியாது என வெளிநாட்டு தூதரகங்களுக்கான கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கம் தனது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மீளாய்வு செய்யப்படவுள்ள GSP+ நிவாரணத்தை பாதிக்கும் சாத்தியம் குறித்தும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

தவறான தகவல், தகவல்களைத் திரிபுபடுத்தல் ஆகியவற்றின் மூலம் குடிமக்களின் போராட்டங்களை குற்றச் செயல் என முத்திரை குத்தி பெரும்பாலும் இல்லாதபோகும் என எதிர்பார்க்கப்படும் GSP+ நிவாரண இழப்பின் பொறுப்பை போராட்டக்காரர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்தின் முயற்சி ஆபத்தானது.

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அதன் அடக்குமுறைக் கொள்கைகள், தண்டனையின்மை மற்றும் ஊழலை அரசாங்கம் ஒப்புக்கொண்டு விலகிச் செல்ல வேண்டும்.

 

 

-tw