இலங்கையிலிருந்து கஞ்சா ஏற்றுமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அனுமதி இரண்டு மாதங்களில் கிடைக்கும் என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சா ஏற்றுமதி தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்க தேவையான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், குறித்த சட்டமூலத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் நாட்டில் கஞ்சா சட்ட பூர்வமாக்கப்படும் எனவும் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதி
கஞ்சா ஏற்றுமதி மூலம் இலங்கையின் வருமானத்தை அதிகரிக்க முடியுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட கஞ்சா பாவனையை மூலிகையாக பயன்படுத்த அதன் பாவனையை ஊக்குவிக்கவும் தாம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளில் கஞ்சாவை உள்ளடக்கிய குளிர்பானங்களும் பல வகையான உணவுகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கையிலும் இந்த நிலை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், பொழுதுபோக்குக்காகவும் போதைக்காகவும் கஞ்சா பயன்படுத்தப்பட கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா செய்கை – அனுமதி பத்திரம்
இலங்கையில் கஞ்சா செய்கையை மேற்கொள்ளவுள்ளோருக்கு தற்காலிக அனுமதி பத்திரம் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் பின்னர் அவர்களுக்கான நிரந்தர அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா ஏற்றுமதியை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியுமெனவும் சிசிர ஜயகொடி கூறியுள்ளார்.
வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் கஞ்சா ஏற்றுமதி குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-ibc