இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகள் தீவிரம் – மஹிந்த கவலை

இலங்கை மீது சர்வதேச தலையீடுகள் தீவிரமடைந்துள்ளதால் பொருளாதார பாதிப்புகளுக்கும் அது காரணமாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட ஏழாம் நாள் விவாதத்தில் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்துழைப்புடன் செயற்படுவது முக்கியம்.

நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் செயற்படுவதைக் அவதானத்திற் கொண்டு அரசியல் ரீதியில் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளாமல் ஒத்துழைப்புடன் செயற்படுவது முக்கியம்.

இம்முறை வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் சாதகமான பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.புதிய பொருளாதார திட்டங்களை நிதியமைச்சர் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளதைக் காண முடிகிறது.

நாட்டின்பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

உலக பொருளாதார நிலை மற்றும் அரசியல் நடைமுறைகளை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியுள்ளதுடன் சிறந்த திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தை சுபீட்சமானதாக கட்டியெழுப்ப முடியும்.

நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதற்கு யார் காரணம் என காரணம் காட்டி குறுகிய நோக்கத்துடன் செயல்படாமல் கடந்த காலங்களை அனுபவமாக்கிக் கொண்டு செயற்படுவது முக்கியமாகும்.

2015 ஆம் ஆண்டு நாட்டை ஆண்ட நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் பாரியளவு கடன்களை பெற்றிருந்தது. இது பாராளுமன்றமும் நாட்டு மக்களும் அறியாத விடயமல்ல.

பொருளாதார பாதிப்பு தொடர்பில் தீர்வுக்கான யோசனைகளை தற்போது முன்வைப்பவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் என்பதை மறந்தே செயல்படுகின்றார்கள். சவால்களை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கும் போது அதனை ஏற்க மறுத்தவர்கள் தற்போது விமர்சனங்களை முன் வைப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.

வெறுமனே வீரவசனம் பேசுபவர்களால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. நாம் வெறுமனே வீரவசனம் மாத்திரம் பேசிக் கொண்டிருப்பவர்களல்ல. சவால்களை பொறுப்பேற்பதே எமது கொள்கையாகும்.சவால்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சி ஓடவில்லை.

கடன் சுமையால் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நாட்டையே பொறுப்பேற்றோம். அந்த வகையில் நாட்டை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்,கொரோனா தொற்று பரவல் காலங்களில் கடுமையான பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது.அச்சமயம் எதிர்கொண்ட நெருக்கடி நிலையை ஒரு தரப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்.

அரச கடன்களை மறுசீரமைத்து வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள். நாட்டின் பாதுகாப்பு அனைத்து துறைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும். தேசிய பொருளாதாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

-ift