இலங்கை வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித் துகள்களின் தர அளவு மீறப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் இருக்கக்கூடிய தூசித் துகள்களின் அளவு (ஒரு கன மீட்டரில் இருக்கக்கூடிய மைக்ரோகிராம் அளவு) சுமார் 50 ஆகும்.
இந்த நாட்களில் இது சாதகமற்ற முறையில் 75 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் நடுப்பகுதி முதல் மார்ச் வரை இந்தியாவில் ஏற்படும் பாதகமான காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது.
இதன் காரணமாக இந்த நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் அதிக வாகன நெரிசல் காரணமாக வெளியேறும் தூசித் துகள்களின் அளவு அதிகமாக இருப்பதாகவும், அவ்வாறானதனால் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வரும் காற்றுடன் வரும் தூசித் துகள்களால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி, கொழும்பு ஆகிய நகரங்களில் தூசித் துகள்களின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை முடியும் வரை, அதாவது அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை இந்த நிலை அவ்வப்போது தொடரும் என சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், சூரிய ஒளியின் முன்னிலையில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்கவும் முகக் கவசம் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
-tw