இலங்கை மின்சார சபையின் (CEB) தற்போதைய இழப்பை ஈடுசெய்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு படிகளின் கீழ் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (29) நடைபெற்ற தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உபகுழுவின் கூட்டத்தில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது.
மின்சார கட்டண அதிகரிப்பு
நாடாளுமன்றத்தின் அறிக்கையின்படி, தற்போதைய இழப்பை ஈடுசெய்வதற்கு சுமார் 70% மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை பிரதிநிதிகள் சந்திப்பின் போது தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு வங்கிகள் மற்றும் மின்சார விநியோகஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரால் கிட்டத்தட்ட 650 பில்லியன்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கிய நிறுவனங்களுக்கு 35 பில்லியனும், அனல் மின் விநியோகஸ்தர்களுக்கு 75 பில்லியனும் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார கட்டணத்தை அதிகரிப்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ibc