இலங்கையின் தேசிய வளங்கள் புலம்பெயர் தமிழருக்கு விற்பனை – ரணிலின் முடிவுக்கு எதிர்ப்பு

இலங்கையில் வருடாந்தம் 9 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டும் சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்நிய செலவாணியை இலக்காக கொண்டு சிறிலங்கா டெலிகாம் நிறுவனத்தை மலிவான விலைக்கு விற்பனை செய்து டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த முடிவை எடுத்துள்ளதாக அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய வள விற்பனை

இலங்கையின் தேசிய வளங்களை விற்பதை நோக்கமாக கொண்டு அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதெனவும், அதனை தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் ஆதரிக்கிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

லாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பனை செய்யப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் தற்போது இலங்கையின் தேசிய தொலைதொடர்பு நிறுவனமான ரெலிகொம் நிறுவனத்தை விற்க முயற்சிக்கிறது எனவும் அவர் சாடியுள்ளார்.

பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்

அரசாங்கமும் அதிபரும் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறாக இலங்கையின் வளங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்ள வேண்டுமென அத்துரலியே ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு லாபத்தை ஈட்டிகொடுக்கும் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது விற்கப்படுமாயின் நாடு மீண்டும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

-ibc